சென்னை, ஜூலை 24: மாநகர பேருந்து ரூட்டில் யார் தலை என்ற பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்களை அரிவாள் வெட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பெரம்பூரில் இருந்து திருவேற்காடு செல்லும் தடம் எண்.29 இ பேருந்து நேற்று பகல் 2.30 மணி அளவில் அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை மெகா மார்ட் அருகே சென்று கொண்டு இருந்தது.

அந்த பேருந்தின் படிக்கெட்டில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் நின்றபடி பயணம் செய்தனர். அப்போது பின்னால் 4 இரு சக்கர வாகனத்தில் வந்த பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் வேறு சில மாணவர்களில் 2 பேர் இறங்கி கையில் பட்டா கத்திகளுடன் ரோட்டில் ஓடிச்சென்று மாநகர பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்களையும் சரமாறியாக வெட்டினர். இதில் இருவருக்கும் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து புகாரின் பேரில் அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர் பெயர் வசந்தகுமார் (வயது 20) என்பதும், மற்றொருவர் பெயர் ஆகாஷ் (வயது 18) அடையாளம்பட்டு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ படித்து வந்தது தெரியவந்தது.

வசந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பஸ் ரூட்டில் யார் தலைவர் என்ற தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கத்தியால் வெட்டியது தெரியவந்தது. இது தொடர்பாக திருவள்ளூர் மதுரவாசல் என்ற இடத்தை சேர்ந்த ஸ்ருதி (வயது 19), பெரிய பாளையத்தை சேர்ந்த மதன் (வயது 24) மற்றொரு மாணவன் செங்குன்றம் பகுதியை சேர்ந்த கடந்த ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் படித்து விட்டு பாதியில் நிறுத்திய விக்கி (வயது 21) என்பதும் தெரியவந்தது.

அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. மேலும் ஆரம்பாக்கம் மற்றும் அமைந்தகரை ஆகிய பகுதிகளை சேர்ந்த 2 மாணவர்களை தேடி வருகின்றனர்.