மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு அரசு பணி

சென்னை

சென்னை, ஜூலை 24: பார்வையற்ற 7 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு அச்சகம் மற்றும் எழுதுபொருள் துறையில் இளநிலை புத்தக கட்டுநர் பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.
இது குறித்து அரசின் செய்திக்குறிப்பில் கூறியிருப்பது வருமாறு:- எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 14 விழுக்காடு பணியாளர்கள் மாற்றுத் திறனாளிகள் ஆவர்.

அந்த வகையில் பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து, வாழ்வளிக்கும் பொருட்டு, சிறப்பு நேர்வாக விதிகளை தளர்வு செய்து, புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த ஆண்டின் முதுநிலை வரிசைப்படி எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் மூலமாக அரசு அச்சகங்களில் 7 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு “இளநிலை புத்தகம் கட்டுநர்” பதவியில் பணி நியமனம் வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி, பூவிருந்தவல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த 7 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் அரசு அச்சகங் களில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் இன்று வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர்.க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஆ. கார்த்திக், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குநர்
வே.ப. தண்டபாணி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.