மும்பை, ஏப்.11: பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த நேற்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கடைசி பந்தில் இரு ரன்கள் எடுத்து, மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.

தசை பிடிப்பு காரணமாக ஓய்வில் உள்ள ரோஹித் சர்மாவிற்கு மாற்றாக, பொல்லார்டு தலைமையில் மும்பை அணி களம்கண்டது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் (100)-கிறிஸ் கெய்ல் (63) ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்ட, மறுபுறம் எவ்வித ஈவு இரக்கமின்றி பந்துகளை மைதானத்தின் நாளாபுறமும் தெறிக்கவிட்டு வெளுத்துவாங்கினார், பொல்லார்டு. இருப்பினும், கடைசி பந்துவரை வெற்றியை நிர்ணயிக்க முடியாத சூழலே நிலவியது.

எஞ்சிய ஒரு பந்தில், மும்பையின் வெற்றிக்கு இன்னும் 2 ரன்களே தேவைப்பட்ட நிலையில், அல்ஜாரி ஜோசப்பும் ராகுல் சாஹரும் களத்தில் இருந்தனர். பரபரப்பு தொற்றிக்கொண்ட சூழலிலும், எளிதாக 2 ரன்கள் அடித்து வெற்றி பெற செய்தார், ஜோசப். இதனால், கடைசி பந்தில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றது.

இதன்மூலம், மொஹாலியில் பஞ்சாப்பிடம் அடைந்த தோல்விக்கு, நேற்றைய போட்டியில் வென்று மும்பை அணி பழித்தீர்த்துக்கொண்டது.