புதுடெல்லி, ஜூலை 25: தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற உள்ள 36-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு வரியைக் குறைக்க முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

மேலும் பல முக்கிய பொருட்களுக்கு வரி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் பிஜேபி இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்த பின்னர்,கடந்த மாதம் 21-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதன்முறையாக நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் மின் வாகனங்களுக்கு வரி குறைப்பு, லாட்டரிக்கு வரியை மாற்றியமைப்பது போன்ற விஷயங்கள் குறித்து அடுத்த கூட்டத்தில் தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி வரி தாக்கலுக்கு இரண்டு மாதகால அவகாசம் வழங்க கடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படிகணக்குத் தாக்கலுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

பேட்டரி சார்ஜர்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி செலுத்துவதை எளிமைப் படுத்தும் வகையில் ஆதாரை இணைக்க முடிவு செய்யப்பட்டது. காலம் கடந்த வரி தாக்கலுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் ஜிஎஸ்டி கவுன்சில் இன்று முதன்முறையாக கூடுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஜிஎஸ்டி கவுன்சிலில் உள்ள மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.

இம்மாதம் 5-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மின்சார வாகனங்களுக்கான வரிகள் வெகுவாக குறைக்கப்பட்டது. பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனங்களை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த வாகனங்களுக்கு வரி குறைக்கப்பட்டது.

வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டதுடன், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான உதிரி பாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது செலுத்த வேண்டிய சுங்கவரி மத்திய பட்ஜெட்டில் குறைக்கப்பட்டது.

இந்நிலையில¢ இன்று நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

லாட்டரி சீட்டுகளுக்கான வரியை மாற்றி அமைப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போது மாநில அரசுகள் நடத்தும் லாட்டரிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி வரியும், மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் நடத்தும் லாட்டரிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது.

இந்த வரியை மாற்றியமைப்பது குறித்து அட்டர்ஜி ஜெனரலின் கருத்தை கேட்டறிந்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. பெட்ரோல், டீசலுக்கு ஏற்கனவே 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு துறையினர் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இன்று கூட உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேலும் சில பொருட்களுக்கான வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.