புதுடெல்லி, ஜூலை 25: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளை பிரத்யேகமாக விசாரிக்க மாவட்டந்தோறும் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் எனப்படும் போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் விதத்தில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் போக்சோ வழக்குகள் குறித்து முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நீதிமன்றத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிக்கலாம் என்றும், இதற்காக திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நீதிமன்றங்கள் 60 நாட்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான நிதியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக 30 நாட்களுக்குள் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் தகவல்களை திரட்டுவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.