உச்சநீதிமன்ற வழக்குகளை விரைவுப்படுத்துக

சென்னை

சென்னை, ஜூலை 25: பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும். என தமிழக அரசை வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாலாற்றின் குறுக்கே தடுப்பறணைகள் அமைக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது. தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 4.25 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் பாலாறு விளங்குகிறது.

தமிழக எல்லையில் உள்ள நாட்றாம்பள்ளியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள நூல்குண்டா என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 50 அடி உயரத்துக்கு மிகப்பெரிய தடுப்பு அணையை ஆந்திர அரசு கட்டி முடித்துவிட்டது. நூல்குண்டா புதிய தடுப்பு அணை குப்பம் அடுத்த கொத்தப்பள்ளியிலிருந்து சுமார் 10 கி.மீ. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள 22 தடுப்பு அணைகளையும் 40 அடி உயரம் வரை உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறது. தமிழக அரசு பாலாறு தடுப்பணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை விரைவுபடுத்தாமல் வாளா இருந்தது கண்டனத்துக்கு உரியது.

தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொண்டு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும். மேலும் தடுப்பு அணைகள் அமைக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது. இல்லையேல் பாலாற்றில் இனி சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதை உணர்ந்து செயல்பட வலியுறுத்துகிறேன்.
இவ்வாறுஅவர் அறிக்கையில் கூறியுள்ளார்.