முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி

சினிமா

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக, உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படும் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாகிறது.

இப்படத்தை தார் மோஷன் பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. முத்தையா முரளிதரன் ஆக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க உள்ளார். எம். எஸ். ஸ்ரீபதி இப்படத்தை எழுதி இயக்க உள்ளார். தமிழில் உருவாகும் இப்படம், உலகின் பல மொழிகளில் வெளியிட உள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடுவோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, முத்தையா முரளிதரன் கூறுகையில், எனது வாழ்வின் கதையை படமாக தயாரிக்கும் தார் மோஷன் பிக்சர்ஸ் உடன் சேர்ந்து பணியாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இப்படத்தை 2020-ம் ஆண்டின் கடைசியில் வெளியிட நாங்கள் எண்ணி இருக்கிறோம்.

விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த கலைஞர் என்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போவதை நான் பெரும் கௌரவமாக கருதுகிறேன். இந்த படக்குழுவுடன் இணைந்து நான் பணியாற்றிவருகிறேன். இனியும் பணியாற்றுவேன், என்றார்.

சிறந்த தமிழ் விளையாட்டு வீரர்களின் ஒரு சின்னமாக திகழும் முத்தையா முரளிதரனின், கதாபாத்திரம் எனக்கு சவாலாகவே இருக்கப்போகிறது.

இதை நான் ஆவலோடு எதிர்கொள்ள காத்திருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கும், முரளிதரனுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜய்சேதுபதி கூறினார்.