சென்னை, ஜூலை 26: டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 3 எம்எல்ஏக்கள், அதிமுக ஆதரவாக மாறியுள்ள நிலையில், சபாநாயகர் அளித்த நோட்டீசை திரும்ப பெற அதிமுக தலைமை வலியுறுத்த உள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு டிடிவி தினகரன் தலைமையில் 18 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி மாற்ற வேண்டும் என கவர்னரை சந்தித்து இந்த எம்எல்ஏக்கள் மனு அளித்திருந்தனர்.

இந்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவுக்கு தடைகோரி நீதிமன்றத்தில் 18 எம்எல்ஏக்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், மேலும் கள்ளக்குறிச்சி, அறந்தாங்கி, விருத்தாசலம் தொகுதி எம்எல்ஏக்களும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், இந்த மூன்று எம்எல்ஏக்கள் விளக்கம் அளிக்க கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், சபாநாயகரின் நோட்டீசுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் நீதிமன்றம் சபாநாயகரின் செயலுக்கு தடைவிதித்தது. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் டிடிவி தினகரன் அமமுக எதிர்பார்த்த வாக்குகளை பெறவில்லை. இதனால் அமமுகவிலிருந்து விலகி மீண்டும் அதிமுக ஐக்கியமாக தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகிய 3 எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த மூன்று எம்எல்ஏக்களும் அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ள நிலையில், சபாநாயகர் உத்தரவுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை வரும் 30-ம் தேதி வரவுள்ள நிலையில், இந்த வழக்கை 3 எம்எல்ஏக்கள் வாபஸ் பெற உள்ளதாக தெரிகிறது. மேலும் சபாநாயகர் இந்த 3 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய போது, அதிமுக தலைமைக்கு சபாநாயகர் தரப்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

3 எம்எல்ஏக்களும் தற்போது அதிமுக அரசுக்கு ஆதரவாக உள்ளதால், 3 எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அதிமுக தலைமை கடிதம் அளிக்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி அதிமுக தலைமை கடிதம் அளிக்கும் பட்சத்தில், 3 எம்எல்ஏக்கள் மீதான நடவடிக்கை சபாநாயகர் திரும்ப பெறுவார் என தெரிகிறது.