காஞ்சிபுரம், ஜூலை 26: 26-ம் நாளான இன்று ஆதி அத்திவரதருக்கு ரோஜா வண்ண பட்டாடை அணிவிக்கப்பட்டு, அத்திப்பழம், பாதாம், ஏலக்காய், திராட்சை, வெட்டிவேர் மற்றும் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்து வருகிறார்.

26-ம் நாளான இன்று ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் சாரை சாரையாக வரிசையில் நிற்க துவங்கினர். இதனால் காஞ்சி நகரமே எங்குபார்த்தாலும் பக்தி கோஷங்களால் பரவசமடைந்தது.
வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் நிகழ்ச்சியோடு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு பெருமாளை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து ஆதி அத்திவரதருக்கு ரோஜா வண்ணத்தில், மெரூன் கலர் பார்டர் அமைந்த பட்டாடை அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெருமாளுக்கு அழகு சேர்க்கும் முத்து கிரீடம்,அத்திப்பழம், பாதாம், திராட்சை, ஏலக்காய் மற்றும் வெட்டிவேரால் வேயப்பட்ட நீண்ட மாலைகள் சாற்றப்பட்டு காலடியில் பல வண்ண ரோஜா மாலைகள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

26நாளான இன்று ஆடி வெள்ளி , ஆடி கிருத்திகையான முக்கிய நாள் என்பதால் அத்திவரதரை காண அதிகாலை முதலே கூட்டம் அலை மோதியது. கட்டுக்கடாங்காத கூட்டத்தை சரி செய்யவும், பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்கவும், காவல்துறை, பல தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களும் கூட்டத்தை சரி செய்து அனுப்பி வைப்பதுடன் பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கிகள் மூலம் தகவல்களை உடனுக்குடன் கூறி கூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். ஆடி வெள்ளி, கிருத்திகை என்பதால் பூ,காய்,கனி,வேர்,தானியத்தால் அலங்கரித்து சிறப்பு அலங்காரத்தில் ஆதி அத்திவரதர் காட்சி கொடுத்து வருவது சிறப்பு.