சென்னை, ஜூலை 26: உலக செயற்கைக் கருத்தரிப்பு நாளை ஒட்டி சென்னையிலுள்ள ஒயாசிஸ் கருத்தரிப்பு மையத்தில் புதிய பாதுகாப்பு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தம்பதியின் கவலையை போக்கும் விதமாக, உயிரியியல் காரணிகள் கலந்து போவதற்கான வாய்ப்புகளை முற்றிலும் தவிர்க்கும் புதிய பாதுகாப்பு முறையை ஒயாசிஸ் கருத்தரிப்பு மையம் அறிமுகம் செய்துள்ளது.

உயிர் மாதிரிகள் கையாளப்படும் எல்லா கட்டங்களிலும், எல்லா இடங்களிலும் தொடரும் இந்தப் புதிய மின்னணு கண்காணிப்பு முறை இந்தியாவிலேயே முதல் முறையாக இங்கு செயல்படத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள ராயல் ஓல்டம் மருத்துவமனையில், செயற்கை கருத்தரிப்பு முறையில் பிறந்த முதல் குழந்தையான லூயிஸ் பிரிவுனின் பிறந்த நாளான ஜூலை 24-ம் தேதியை தற்போது உலக செயற்கைக் கருத்தரிப்பு முறை தினமாகக் கொண்டாடுகிறார்கள். இதனை முன்னிட்டு அன்றைய தினத்தில் ஒயாசிஸ் செயற்கைக் கருத்தரிப்பு மையம், இந்த புதிய கண்காணிப்பு முறையைத் தொடங்கியுள்ளது.

செயற்கைக் கருத்தரிப்புக்கான உயிரியியல் காரணிகளின் கலப்பைத் தவிர்க்க உதவும் புதிய மின்னணு கண்காணிப்பு முறை அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடையே பேசிய ஒயாசிஎஸ் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வசுந்தரா ஜெகன்னாதன், எங்களது மருத்துவமனையில் நீங்கள் சிகிச்சை பெற வரும்போது உங்களது கரு, சினை முட்டை, விந்தணுக்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ளன என்றார்.