சென்னை, ஜூலை 27: சென்னையில் ஒரு வாரமாக பெய்துவரும் மழை காரணமாக குடிநீர் டேங்கர் லாரிகளின் தேவை குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் நாள்தோறும் சுமார் 4 ஆயிரம் முன் பதிவுகள் பெறப்பட்டதாகவும், தற்போது இது 3 ஆயிரமாக குறைந்திருப்பதாகவும், குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

192 நாட்களாக மழை பெய்யாமல் இருந்த சென்னையில் ஜூன் முதல் வாரத்தில் இருந்து அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை அனுபவித்த சென்னை மக்கள் மழையை அபூர்வமாக பார்த்தது மட்டுமின்றி மழை நீரை கீழ்நிலை தொட்டிகளிலும், மழை நீர் சேமிப்பு கிணறுகளிலும் பத்திரமாக சேமிக்க தொடங்கினார்கள்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் பிரத்தியேகமான ஏற்பாடுகளை நல்வாழ்வு சங்கத்தினர் செய்தனர். ஒக்கியம் துரைப்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை குடியிருப்புகளில் மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டன.

இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் உயர தொடங்கி இருக்கிறது. மேலும் சில நாள் மழை பெய்யும் பட்சத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு டேங்கர் லாரிகளில் தண்ணீர் கேட்டு நாள்தோறும் 3,800 முதல் 4 ஆயிரம் வரை குடிநீர் வாரிய அலுவலகத்தில் முன் பதிவு செய்யப்பட்டது. இப்போது இந்த முன் பதிவு 3 ஆயிரமாக குறைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனியார் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், தனி நபர்கள் தண்ணீர் கேட்டு பதிவு செய்வது கடந்த சில நாட்களில் குறைந்து இருக்கிறது என்று கூறினார்.

இதனிடையே ஜூலை 29-ம் தேதி முதல் முன் கட்டணம் செலுத்தி பதிவு செய்வோருக்கு 2 நாளில் தண்ணீர் சப்ளை செய்யப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த புதிய முறை ஜூலை 29 முதல் அமலுக்கு வரும் என குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர் டேங்கர்கள் தேவை குறைந்தது