புதுடெல்லி /சென்னை, ஜூலை 27: தமிழகத்தில் இதுவரை 287 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப் பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் 69 பொருட்களுக்கு வரியை குறைக்க வலியுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

36-வது சரக்கு மற்றும் சேவை மன்ற கூட்டம் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் அமைச்சர் டி.ஜெயக்குமார். கூடுதலை தலைமை செயலாளர் சோமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கருதப்படும் மின் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது, இந்த வாகனங்களுக்கான சார்ஜ் வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைப்பது மற்றும் மின்சார பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும¢ நேர்வுகளில் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிப்பது போன்ற கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் ரூ.50 லட்சம் விற்பனை அளவு கொண்ட சிறுசேவை வழங்குவோருக்கு இணக்க வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை 31.7.2019 வரை நீட்டிப்பது என முடிவு எடுக்கப்பட்டதை மேலும் 30.9.2019 வரை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதேபோல் காலாண்டு விவர அறிக்கையினை தாக்கல் செய்வதற்கான கெடுவை 31.8.2019 வரை நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் டி.ஜெயக்குமார் பேசுகையில், கைத்தறி பொருட்கள்; கொள்கலனில் அடைக்கப்பட்டு வணிகச் சின்னம் இடப்பட்ட அரிசி மற்றும் இதர உணவு தானியங்கள்; ஜவ்வரிசி; தீப்பெட்டி; ஆட்டா சக்கிக்கு இணையாக கிரைண்டர் மீதான வரியினை நிர்ணயித்தல்; ஊறுகாய்; வெண்ணெய்; நெய்; விவசாயக் கருவிகள்; ஜவுளித் தொழிலில் பயன்படும் இயந்திர பாகங்கள்; பம்பு செட்டுகள்; மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள், பவானி தரை விரிப்பு, கொசு அளிப்பாள், பனஞ்சர்க்கரை, பப்பாளி மிட்டாள், சாம்பிராணி, பனை நார், கோரைப்பாய், வாழையிலை தட்டு உள்ளிட்டவைகளுக்கு வரியை குறைக்க வேண்டும் என்றும், நெல் குற்றுகை, நுண்நீர் பாசன கருவிகள் மற்றும் ரேசனில் வழங்கப்படும் பாமாயில், மண்ணெண்ணெய்க்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் இதுவரை 287 பொருட்கள் மற்றும் 37 சேவைகள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 69 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.