சென்னை, ஜூலை 27: பள்ளிக்கரணையில் கணவனின் குடிபோதையால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் அடுத்த பீர்க்கன்கரணை காமராஜ் நகர் எம்ஜிஆர் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 37). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்துவந்தார். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (வயது 26). இருவரும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பல்லாவரத்தை சேர்ந்த இவர்கள், திருமணத்திற்கு பின்னர் பீர்க்கன்கரணையில் வீடு எடுத்து வசித்துவந்துள்ளனர். அய்யனாருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. நாள்தோறும் குடித்துவிட்டு வீடு திரும்பும் அய்யனார், குடிபோதையில் கிருஷ்ணம்மாளை அடித்து துன்புறுத்தி வந்ததாக தெரிகிறது. இதனால், கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், நேற்றிரவும் கணவன்-மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த கிருஷ்ணம்மாள், மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். அப்போது, கணவர் அய்யனார் தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி கொண்டு தனக்கு தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீபற்ற வைத்து கொண்டுள்ளார்.

பதறிப்போன கிருஷ்ணம்மாள், அய்யனாரை காப்பாற்றுதற்காக முயன்ற போது, இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டுவந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து, பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.