சென்னை, ஜூலை 27: இந்தியாவின் 11-வது ஜனாதிபதி அப்துல் கலாமின் நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரம், பேய்க்கரும்பில் உள்ள நினைவிடத்தில் கலாம் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் ஏவுகணை மனிதன் என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி ஷில்லாங்கில் மரணமடைந்தார்.

இந்தியாவின் இளைஞர்களுக்கு அப்துல் கலாம் முன்னோடியாக திகழ்ந்தார். அவர் இளைஞர்களிடம் கனவு காணுங்கள் எனக் கூறி பின்னர் அந்தக் கனவை நிஜமாக்க பாடுபடுங்கள் என்று அறிவுறுத்தினார். அவரின் இந்த வாக்கியம் இளைஞர்கள் பலருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது.

கடந்த 2002-ம் ஆண்டு இந்தியாவின் 11-வது ஜனாதிபதியாக பதவி வகித்த அப்துல் கலாம், தனது பதவி காலத்தில் அனைவராலும் மிகவும் போற்றப்பட்ட ஜனாதிபதியாக இருந்தார். அவர் ஜனாதிபதியாக இருந்தப் போதும் மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் உரையாடி அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார். மேலும் அவர் நகர்புற வசதிகளை கிராமங்களுக்கு கொண்டு வருவது குறித்து அப்போதைய மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றப் போது அந்த நாடுகளின் நாடாளுமன்றத்தில் அப்துல் கலாம் தனது உரையில் அவர், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கலியன் பூங்குன்றனாரின் வரிகளை சுட்டுக்காட்டி, உலக மக்கள் அனைவரும் ஒன்றானவர்கள் எனக் கூறினார்.

அப்துல்£ கலாமின் நினைவு நாளான இன்று டுவிட்டரில் மக்கள் அனைவரும் என்ற ஹேஸ்டேக்கில் இவர் குறித்து பதிவிட்டுவருகின்றனர். இந்திய அளவில் அது டிரெண்டாகி வருகிறது.