காஞ்சிபுரம், ஜூலை 27: 27ம் நாள் இன்று பெருமாளுக்கு மிகுவும் உகந்த 4ம் சனிக்கிழமை என்பதால் ஆதி அத்திவரதர் சாம்பல் வண்ண பட்டாடையில், மல்லிகை மகிழம்பூ மற்றும் பல்வேறு வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட மலர்மாலைகள் சூடப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி கொடுத்து வருகிறார். விடிய விடிய காத்திருந்து பக்தர்கள் தரிசனம்செய்தனர்.

அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்களால் காஞ்சி நகரமே அபரிமிதமான கூட்டத்தால் திணறி வருகிறது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் இரவு முழுவதும் வரிசையில் காத்திருந்த பக்தர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
27ம் நாளான இன்று 4-ம் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் முதல் நாள் இரவு காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து ஆலயத்தில் தங்கினர்.பின்னர் வரிசையில் காத்திருந்தனர்.

காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுப்ர பாதம் நிகழ்ச்சியோடு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு பெருமாளை எழுப்பும் வைபவம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து தரிசனம் செய்தனர்.
ஆதி அத்திவரதருக்கு சாம்பல் வண்ணத்தில் பட்டாடை அணிவிக்கப்பட்டு, அவரது கழுத்தில் சந்தன முல்லை,மல்லிகை, மகிழம்பூ மலர்களுடன் பல்வேறு வாசனை மலர்களால் தொடுக்கப்பட்ட நீண்ட மாலைகள் அணிவிக்கப் பட்டும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

கடந்த ஒன்றாம் தேதி துவங்கிய இந்த வைபவத்தில் இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்னும் சில தினங்களே சயனத் திருக்கோலத்தில் இருக்கும் எம் பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

அபரிமிதமாக கூட்டத்தால் காஞ்சி நகரமே கோவிந்தா.. கோவிந்தா.. என்றும் நாராயணா…. என்ற பக்தி கோஷங்களே ஒலித்துக்கொண்டிருக்கிறது.