வேலூர், ஜூலை 28: நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பொய் மூட்டையை ஸ்டாலின் அவிழ்த்து விடுகிறார் என்றும் ஆட்சியை பிடிக்கும் அவரது கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நேற்று வாணியம்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் எதற்காக நிறுத்தப்பட்டது என்பது பொதுமக்களாகிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். மீண்டும் தேர்தல் ஏன் வந்தது என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். நாடாளுமன்ற தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

மக்களுக்கு எதை நிறைவேற்ற முடியுமோ, எதை செய்துதர முடியுமோ அதை மட்டும் தான் அறிவிப்போம். அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றும் ஒரே கட்சி அ.தி.மு.க. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து உங்களிடத்திலே வாக்குகளைப் பெற்றார்.
ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து, மக்களின் காதுகளில் பெரிய கடுக்கு போட்டுவிட்டார்.

இது பச்சைப் பொய். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களிடம் வாக்குகளை பெறுவதுதான் தி.மு.க.வின் எண்ணம்.நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வைவிட அதிக இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதற்கு பொய்யான வாக்குறுதியை அளித்து, மக்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்றது தான் காரணம். தமிழகத்தில் ஆட்சியில் அமர்வோம் என ஸ்டாலின் கனவு கண்டு வருகிறார்.

அந்த கனவு ஒரு போதும் பலிக்காது. ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் என்ன திட்டங்கள் நடைபெற்றிருக்கிறது என்று சொல்லி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் இந்த அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று ஸ்டாலின் பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக உள்ளது. இன்றைக்கு ஆம்பூர், ராணிப்பேட்டை, வாணியம்பாடி, வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகள் நிறைந்திருக்கிறது. இதற்கு காரணம் தேவையான மின்சாரம் கிடைப்பதனால் தான் என்றார்.