மீண்டும் நான்கு வழி போக்குவரத்து அமல்

சென்னை

சென்னை, ஜூலை 28: அண்ணாசாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து விட்டதால், ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் நான்கு வழிபாதை மீண்டும் அமலுக்கு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணாசாலை சீரடைந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வந்ததால் அண்ணாசாலை, பூந்தமல்லி சாலைகளில் பல்வேறு இடங்களில் இருவழிப்பாதை போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகயும், 4 வழிப்பாதை போக்குவரத்து இருவழிப்பாதை போக்குவரத்தாகவும் மாற்றப்பட்டு இருந்தன.

தற்போது மெட்ரோ ரெயில் முதல் கட்டப்பணிகள் நிறைவடைந்து, சாலைகளில் வழக்கம் போல் இருவழி போக்குவரத்து தொடங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து இந்த சாலை முழுவதும் மீண்டும் நான்கு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளன.

அண்ணாசாலையில் தலைமை தபால் நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்பவர்கள் ராயப்பேட்டை செல்லும் சாலை வழியாக சுற்றிக்கொண்டு செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனால் அலுவலக நேரங்களில் இந்தபகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு அரை மணிநேரத்துக்கு மேல் ஆகி வந்தது. அத்துடன் தேவையில்லாத எரிபொருள் செலவும், நேரமும் வீணடிக்கப்பட்டு வந்தது.

தற்போது அண்ணாசாலையிலும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில், சாலையில் அப்புறப்படுத்தப்பட்ட சிக்னல், தடுப்பு உள்ளிட்டவைகளை மீண்டும் அமைத்து கொடுக்கப்பட்டு படிப்படியாக நான்கு வழிப்பாதை போக்குவரத்து அமலாக உள்ளது.

கடைசியாக ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து எல்.ஐ.சி. வரையிலும் பணிகள் நிறைவடைந்து உள்ளன. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையிடம் வரும் 3-ந்தேதி (சனிக்கிழமை) ஆடிப்பெருக்கு அன்று சாலை ஒப்படைக்கப்படுகிறது.

அன்று முதல் ஆயிரம் விளக்கு-எல்.ஐ.சி. வரையிலான அண்ணாசாலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான்கு வழிப்பாதையில் போக்குவரத்து தொடங்குகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.