புதுடெல்லி, ஜூலை 28: காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை அடுத்த வாரத்தில் அக்கட்சியின் காரியக் கமிட்டி கூடி தேர்ந்தெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்த பின்னர் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அதற்கு தார்மீக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். மே 25-ம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் ராகுல் காந்தி தமது பதவி விலகலை அறிவித்தார்.

ஆனால் அவர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை, இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார்.

கட்சிக்கு தங்கள் குடும்பத்திற்கு வெளியே தலைவரைத் தேர்ந்தெடுக்குமாறு ராகுல் காந்தி கூறி வருகிறார். தன் சகோதரி பிரியங்கா காந்தியை தலைவராக்கவும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பதவி விலகி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க முடியாமல் அக்கட்சி மூத்த தலைவர்கள் திணறி வருகின்றனர்.

ராகுல் காந்தியைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் தலைவர் பொறுப்பை வகித்துவந்தவர்களும் பதவி விலகியிருக்கின்றனர். இரண்டு மாத காலமாக தலைமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் இருந்து வருகிறது. இதனால் கட்சிப்பணிகள் தொய்வடைந்துள்ளன. இதன் காரணமாக கட்சியின் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் இடம் பெற்றிருந்த கூட்டணி அரசு கவிழ்ந்ததற்கும் ராகுல் காந்தியின் ராஜினாமா ஒரு காரணமாக கூறப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தை

தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் கட்சி எம்எல்ஏக்களிடையே ஊசலாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கட்சியின் தலைமைப் பொறுப்பை பிரியங்கா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற தொடங்கி உள்ளது.

இதற்கிடையே ராகுல் காந்தி தற்போது நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் அவர் வெளிநாட்டில் இருந்து தற்போது இந்தியா திரும்பி உள்ளார். அடுத்த வாரத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் செயற்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரத்தில் காரியக்கமிட்டிக் கூட்டம் நடைபெறவிருந்தது.

ஆனால், பட்ஜெட் அமர்வு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அது பட்ஜெட் அமர்வு பின்னர் நடைபெறும் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொள்வார் என கூறப்படுகிறது. ஆனால் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதில் அவர் எந்த பங்கும் வகிக்க மாட்டார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதா அல்லது தலைவர், செயல் தலைவர் ஆகியோரை தேர்வு செய்வதா என்பது பற்றி காரியக் கமிட்டிக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.