சென்னை, ஜூலை 28: கார்கில் போரின் 20-ஆம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி சென்னையில் போர் வீரர்களின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.
கார்கில் போரின் 20-ஆம் ஆண்டு வெற்றி தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

அந்தப் போரில் வீரமரணமடைந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.

இதையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மலர் வளையம் வைத்து இன்று மரியாதை செலுத்தினார். உடன் காவல் அதிகாரிகளும், முன்னாள் ராணுவத்தினரும் மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் முன்னாள் ராணுவத்தினர், கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் நினைவு பரிசுகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து பன்நோக்கு மருத்துவமனை வரை முன்னாள் ராணுவத்தினர், மாணவர்கள் கலந்து கொண்ட நடைபயணத்தை ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.