மாஜி மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மரணம்

இந்தியா

ஐதராபாத், ஜூலை 28: முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஜெய்பால் ரெட்டி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 77. முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜெய்பால் ரெட்டி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர், கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ஐதராபாத் நகரில் கச்சிபவுலி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு மனைவியும், இரட்டையர்களான மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 1942ம் ஆண்டு பிறந்த இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்துள்ளார். இதன்பின் அரசியலில் நுழைந்து 1970ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வானார்.

ஜனதாதளத்தின் மூத்த தலைவராக இருந்த ஜெய்பால் ரெட்டி ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக பணியாற்றினார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர் பெட்ரோலியம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

5 முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்பால் ரெட்டி, 2 முறை மாநிலங்களவை உறுப்பினராக வும் இருந்துள்ளார். ஆந்திர மாநில சட்டசபையில் 4 முறை எம்எல்ஏவாகவும் அவர் பணியாற்றி உள்ளார்.

ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, காங்கிரஸ தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.