சென்னை, ஜூலை 29: பொதுமக்களுடன் சென்னை மாநகராட்சி இணைந்து போரூர் ஏரியை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இந்த சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். ஏரியில் இருந்து சுமார் 4 டன் அளவிற்கு மக்காத குப்பைகள் வெளியேற்றப்பட்டன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான போரூர் ஏரி கடும் வறட்சி காரணமாக எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் தண்ணீர் வற்றி கட்டாந்தரையாக காணப்படுகிறது. இந்நிலையில் இந்த ஏரியை சுத்தப்படுத்தும் பணியை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டது.

‘சென்னை பிளக்கிங் சேலஞ்ச் 2019’ என்ற பெயரில் நேற்று காலை நடைபெற்ற இந்த ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஐநூறுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். போரூர் பகுதியை சுற்றியுள்ள குடியிருப்போர் நலச்சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோருடன் மாநகராட்சி ஊழியர்களும் இணைந்து சுத்தப்படுத்தினர்.

காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்த சுத்தப்படுத்தும் பணியின் போது 4 டன் எடையுள்ள பிளாஸ்டிக், பாட்டில்கள், டயர்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டன.

இந்த தூய்மைப் பணியில் பங்கேற்றவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சான்றிதழ் மற்றும் இயற்கை உரம் வழங்கப்பட்டது. மேலும் கையில் அணிந்து கொள்ள கிளவுஸ் மற்றும் நிலவேம்பு குடிநீர் ஆகியவையும் வழங்கப்பட்டன.

தூய்மைப்பணியில் ஈடுபட்டவர்களை ஊக்குவிப்பதற்காக காந்தியடிகள் வேடம் அணிந்த பெரியவர் ஒருவர் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனர் ஆல்பி ஜான் கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.