சென்னை, ஜூலை 29: தி.நகரில், போலீஸ் விசாரணைக்காக காவல் நிலையம் சென்றுவந்த பெண், மறுநாளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தி.நகர் சோலமணியம்மன் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சந்திரன். இவரது மனைவி பார்வதி (வயது 46). இவர் தணிக்காச்சலம் சாலையில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு கவிதா என்ற மகளும், கமல்ராஜ் என்ற மகனும் உள்ளனர். கவிதாவிற்கு, சுபாஷ் சந்திரபோஸ் என்பவருடன் திருமணமாகி இதே வீட்டிலேயே வசித்து வருவதாக கூறப்படுகிறது. உறவினர் மணிகண்டனிடம் இருந்து பெற்ற நகைகளை சுபாஷ் திருப்பி தரவில்லை என்று தெரிகிறது.

இதுதொடர்பாக, கடந்த 27-ம் தேதி பாண்டிபஜார் போலீசில் மணிகண்டன் புகார் அளித்துள்ளார். இதனடிப்படையில் விசாரணைக்காக, சுபாஷூடன், மனைவி கவிதா, மாமியார் பார்வதி ஆகியோரையும் காவல்நிலையம் அழைத்து நேற்று விசாரித்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டின் பால்கனியில் பார்வதி தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததை, பக்கத்து வீட்டுக்காரர் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதன்பேரில், பாண்டிபஜார் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்காக காவல் நிலையம் சென்றுவந்ததால், அவமானம் தாங்கமுடியாமல் பார்வதி இந்த விபரீத முடிவை எடுத்துவிட்டதாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.