சண்டிகர், ஜூலை 29: பாலிவுட் நடிகரிடம் 2 வாழைப்பழத்திற்கு ரூ.442 வசூலித்த 5 நட்சத்திர ஓட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் ராகுல் போஸ், சண்டிகரில் உள்ள ஜேடபிள்யூ மேரியட் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளார். அங்கு அவர் 2 வாழைப்பழங்களை வாங்கியதற்கு ஜிஎஸ்டியோடு சேர்த்து 442 ரூபாய்க்கு பில் கொடுக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராகுல் போஸ், அது குறித்து டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

அந்த வீடியோவில், தான் தங்கியிருக்கும் அறையையும் வாழைப்பழங்களுக்கான பில்லையும் காட்டி, இதை நீங்கள் நம்பி தான் ஆக வேண்டும், பழங்கள் சாப்பிடுவதால் தீங்கு ஏற்படாது என்று யார் சொன்னது? என பதிவிட்டுள்ளார்.

பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வந்த நிலையில், விதிகளை மீறி ஜிஎஸ்டி வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒன்றான வாழைப்பழத்திற்கு வரி வசூலித்ததற்காக ஜேடபிள்யூ மேரியட் ஓட்டலுக்கு கலால் மற்றும் வரிவிதிப்பு துறை அதிகாரிகள் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.