பெங்களூரு, ஜூலை 29: கர்நாடக சட்டசபையில் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.  குரல்வாக்கெடுப்பு மூலம் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றுள்ளதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார்.  கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி அரசு கவிழ்வதற்கு காரணமாக ராஜினாமா செய்த 17 எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்தார். இதனால் மாநில சட்டப்பேரவையின் பலம் 207-ஆக குறைந்தது. 104 உறுப்பினர்களின் ஆதரவு தேவையான நிலையில் எடியூரப்பா அரசு இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது.

சட்டப்பேரவை கூடியதும், நம்பிக்கை தீர்மானத்தை முதலமைச்சர் எடியூரப்பா கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது குறுகிய விவாதம் நடைபெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தள தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
நான் 14 மாதங்கள் எனது அரசை கடும் நெருக்கடிக்கிடையிலேதான் நடத்தினேன். அது பற்றி உங்களுக்கு (பி.எஸ். எடியூரப்பா) பதில் அளிக்க எனக்கு எந்த அவசியமும் இல்லை. எனது மனசாட்சிக்கு தான் நான் பதிலளிக்க வேண்டும். கடந்த 14 மாதங்களிலிருந்து அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் என்ன வேலை செய்தேன் என்பது மக்களுக்குத் தெரியும் என்றார் அவர்.

விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா பேசியதாவது:-
நீங்கள் (பி.எஸ். எடியூரப்பா) முதல்வராக எஞ்சிய காலத்திற்க இருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் கிளர்ச்சியாளர்களுடன் இருக்கிறீர்கள், நிலையான அரசாங்கத்தை கொடுக்க முடியுமா? அது முடியாத காரியம்! இந்த நம்பிக்கை தீர்மானத்தை நான் எதிர்க்கிறேன், ஏனெனில் இந்த அரசாங்கம் அரசியலமைப்பிற்கு மற்றும் ஒழுக்கக்கேடானது என கூறினார்.

விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் எடியூரப்பா பேசியதாவது:-
நான் விவசாயிகளின் நண்பன், விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என அயராது பாடுபட்டு வருகிறேன். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பையும் நான் வேண்டுகிறேன். நாங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் அரசை நடத்திச்செல்வோம். யாரையும் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடமாட்டோம். அதேசமயம் முந்தைய அரசின் குளறுபடிகளை சரசெய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதைதொடர்ந்து நம்பிக்கை தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். இதன் மூலம் தனது அரசின் பெரும்பான்மையை எடியூரப்பா நிரூபித்துள்ளார்.
105 பிஜேபி எம்எல்ஏக்கள், 1 சுயேச்சை எம்எல்ஏவின் ஆதரவும் எடியூரப்பா அரசுக்கு இருந்தது. இதற்கிடையே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரமேஷ், மகேஷ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமாரின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
சபாநாயகரின் நடவடிக்கை சட்ட விரோதமானது என அவர்கள் தங்கள் மனுவில் கூறியுள்ளனர். இந்த மனு எப்போது விசாரணைக்கு வரும் என குறிப்பிடப்படவில்லை.

சபாநாயகர் திடீர் ராஜினாமா
எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதையடுத்து சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் அளித்து விட்டு அவர் அவையை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து துணை சபாநாயகர் அவையை நடத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததையடுத்து அவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகர் ரமேஷ்குமார் பதவி விலகாவிட்டால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர பிஜேபி திட்டமிட்டு இருந்தது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அவரது பதவி தப்பாது என்ற நிலையில் தானாக முன்வந்து ராஜினாமா செய்திருக்கிறார்.