சென்னை, ஜூலை 29: ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் மின் கட்டணம் செலுத்துவோரிடம் கட்டணத் தொகையை காசோலையாகப் பெற மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கீழ் 2 கோடிக்கும் அதிகமான வீட்டு மின் இணைப்புகள், 21 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய மின் இணைப்புகள் , 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிக மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான கட்டணம் மற்றும் புது இணைப்புக்கான கட்டணத்தை அவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் செலுத்துகின்றனர். இதே போல் லட்சக்கணக்கான தொகையை பல உள்ளாட்சி அமைப்புகளும் கட்டணமாகச் செலுத்தி வருகின்றன. இவ்வாறு பெறப்படும் கட்டணத் தொகை சரியான நேரத்தில் அரசுக்குச் சென்று சேர்வதில்லை என குற்றச்சாட்டு உள்ளது. இதனைச் சரி செய்ய மின் வாரியம் ஆலோசனை செய்து வந்தது.

இந்நிலையில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்துவோரிடம் காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.