பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வினியோகம்

சென்னை

சென்னை ஜூலை 29: குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களைத் தயாரித்து, அரசுப் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தை ஆர். நடராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், புதிதாக சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கும் ஒரு தொழில் மையத்தை தமிழக காவல் துறையின் ஓய்வுபெற்றத் தலைவரான ஆர். நடராஜ் எம்.எல்.ஏ. சமிபத்தில் தொடங்கி வைத்தார்.

மெட்ராஸ் நார்த் ரோட்டரி சங்கத்தின் முன்முயற்சியில், தொடங்கப்படும் “கண்ணம்மா” திட்டத்தின் கீழ், இந்த தொழில் மையத்தில் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில், பிஜேபி மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனுவாசன், சர்வதேச ரோட்டரி சங்கத்தின் 2019-21 ஆண்டுகளுக்கான திட்ட இயக்குனர் கமல் சாங்வி, கோவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அருணாசலம் முருகானந்தம், ரோட்டரி சங்கத்தின் 3232 மாவட்ட ஆளுநர் ஜி. சந்திரமோகன் மற்றும் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கூடத்தின் வேந்தர், முனைவர் மரியஸீனா ஜான்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கல்லூரியில் சுமார் 800 சதுரடிப் பரப்பில் தொடங்கப்படும். இந்த தொழில் மையத்தில் – ஆண்டுக்கு 6 லட்சம் சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்ய முடியும்.