பெங்களூரு, ஜூலை 30:  கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்எம் கிருஷ்ணா மருமகனும், பிரபல தொழிலதிபருமான வி,ஜி. சித்தார்த் மாயமாகி இருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா. இவர் மத்திய அமைச்சராகவும், மகாராஷ்டிரா மாநில கவர்னராகவும் பணியாற்றியவர். இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த். இவர் கபே காபி டே என்ற சங்கிலித்தொடர் நிறுவனத்தை நாடு முழுவதும் நடத்தி வருகிறார். திடீரென வி.ஜி.சித்தார்த் மாயமாகியுள்ளார். சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக சிலர் கூறியதால் ஆற்றில் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவரது தொலைபேசியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது.  சக்லேஷ்பூருக்கு செல்வதாக கூறிவிட்டு பெங்களூரிலிருந்து காரில் புறப்பட்ட சித்தார்த்தா, செல்லும் வழியில் மங்களூர் செல்லுமாறு டிரைவரிடம் கூறியதாகத் தெரிகிறது.

அவருடன் வந்த இரண்டு பேர் பம்ப்வெல் சர்க்கிள் என்ற இடத்தில் இறங்கிவிட்டனர். பின்னர் உல்லாலில் உள்ள நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் தன்னை இறக்கி விடுமாறு டிரைவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரை விட்டு இறங்கிய அவர் யாருடனோ போனில் பேசியுள்ளார். பின்னர் மாலை 6.30 மணி வரை அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த அவர் திடீரென காணவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு மணிநேரமாகியும் காருக்கு திரும்பாததால் சந்தேகமடைந்த டிரைவர் பாலத்திற்கு சென்று தேடியுள்ளார். சித்தார்த்தாவை காணாததால் அவர் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார்.

புகாரின் பேரில் தட்சிண கன்னடா போலீஸார் அவரை தேடி வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சித்தார்த்தா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் நேத்ராவதி ஆற்றில் படகுகள் மூலம் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேத்ராவதி ஆற்றின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு வருகின்றன. அவர் யாருடன் கடைசியாக பேசினார் என்பது குறித்து செல்போன் தகவல்களை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். எஸ்எம் கிருஷ்ணாவின் மூத்த மகள் மாளவிகாவை திருமணம் செய்து கொண்டுள்ள சித்தார்த்தாவுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

உருக்கமான கடிதம்:
இந்தநிலையில் நிறுவன ஊழியர்களுக்கு அவர் எழுதிய கடிதம் வெளியாகி உள்ளது. அதில், ‘என் மீது நம்பிக்கை வைத்திருந்த அனைவரையும் கைவிட்டதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது நிறுவனங்களின் ஒவ்வொரு பணப்பரிமாற்றத்துக்கும் நான் தான் பொறுப்பு. சட்டமும் அதைத்தான் குறிப்பிடுகிறது. நீண்டகாலமாக நான் தொடர்ந்து போராடி வருகிறேன். இனியும் என்னால் அழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாது என்பதால் அனைத்தையும் கைவிடுகிறேன். யாரையும் ஏமாற்ற வேண்டும் அல்லது தவறாக வழிநடத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. ஒரு தொழிலதிபராக நான் தோற்று விட்டேன், ஒருநாள் என்னை நீங்கள் புரிந்து கொள்வீர்கள், தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மைன்ட்ரி எனும் ஐடி நிறுவனத்தில் சித்தார்த்தா மற்றும் அவரது பங்குதாரர்களுக்கு 40% பங்குகள் இருந்துள்ளன. இதில் 25% பங்குகளை சித்தார்த்தா அண்மையில் தன்னிச்சையாக விற்பனை செய்ததே பிரச்சனையின் தொடக்கம் என்று கூறப்படுகிறது. மைன்ட் ட்ரீ நிறுவனப் பங்குகள் விற்பனை விவகாரத்தில்தான் சித்தார்த்தா வருமான வரித்துறை அதிகாரிகளால் மிரட்டப்பட்டு மன உளைச்சலுக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கிப்படுகிறது. இதற்கிடையே, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பெங்களூருவில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்கு சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.