மும்பை, ஜூலை 30:  இந்திய கிரிக்கெட் அணி துணை கேப்டன் ரோஹித் சர்மாவிற்கும், தனக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வெ.இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட உள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 3-ம் தேதி வரை இந்த தொடரின் முதல் 2 டி20 போட்டிகள் மட்டும் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி நேற்று புறப்பட்டு புளோரிடா சென்றடைந்தது. முன்னதாக, கேப்டன் விராட் கோலி மும்பையில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: நாம் பொய்களுக்கு முக்கியத்துவம் அளித்துக்கொண்டிருக்கிறோம். உண்மையை எடுத்துப் பார்க்க வேண்டும். நமக்கு எது கிடைக்கிறதோ, அதுவெல்லாம் உண்மையென நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ரோஹித்தையும், என்னையும் இணைத்து வரும் தகவல்கள் உண்மையல்ல. எனக்கும், ரோஹித்துக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. எங்களை வந்து பாருங்கள். நாங்கள் எப்படி ஜூனியர்களான குல்தீப் யாதவ் போன்றோருடன் பேசுகிறோம், தோனி போன்ற சீனியர் வீரர்களுக்கு மதிப்பு அளிக்கிறோம் என்று. அணியில் சூழல் நன்றாக இல்லாவிட்டால் நம்மால் வெற்றிகளை குவித்திருக்க முடியாது. இவ்வாறு கோலி கூறினார்.

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, ரோஹித்துக்கும், விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. இந்த சர்ச்சைக்கு கோலி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும், வெ.இண்டீஸ் தொடருக்கு பின்னரும் அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியே நீடித்தால் மகிழ்ச்சி தான் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த பேட்டியின்போது, பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் உடனிருந்தது, குறிப்பிடத்தக்கது.