சென்னை, ஜூலை 30: அரசியலில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன் என்றும், என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார். மீறி தொல்லை செய்தால் போலீசில் புகார் செய்வேன் என்றும் ஆதரவாளர்களை எச்சரித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் ஃபேஸ்புக் மூலம் கூறியிருப்பது வருமாறு:-

என் தலைமையில் செயல்பட்ட எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை அதிமுகவுடன் நான் ஏற்கனவே இணைத்து விட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். பொது வாழ்க்கையில் இருந்து நான் முழுமையாக விலகி விட்டேன். எனக்கென்று குடும்பம் உள்ளது. குழந்தை பெற்று கணவருடன் வாழ விரும்புகிறேன்.
அதிகாலையிலேயே என்னை தொலைபேசியில் அழைத்து என்னை தொந்தரவு செய்தீர்கள். இனி என்னை யாரும் அழைக்காதீர்கள். மீறி அழைத்து தொல்லை தந்தால் காவல்துறையிடம் புகார் செய்வேன். அரசியலே எனக்கு வேண்டாம் என்று நான் ஒதுங்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஜெ. தீபா தீவிர அரசியலில் ஈடுப்பட்டார், பேரவையை ஆரம்பித்து நிர்வாகிகளை நியமித்தார். ஜெயலலிதாவின் வாரிசு நான்தான் என்றும் அறிவித்தார்.
ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற அரசு எடுத்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்நிலையில், அரசியலை விட்டே விலகி விட்டேன் என்று ஜெ.தீபா அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.