தாம்பரம், ஜூலை 31: பழைய பல்லாவரம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 29). எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண், அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரை ஒரு தலையாக காதலித்து வந்த வெங்கட்ராமன், தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்திவந்ததாக கூறப்படுகிறது. இதேபோல், நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அந்த பெண்ணை, வெங்கட்ராமன் வழிமறித்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு, அந்த இளம்பெண் தொடர்ச்சியாக மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த வெங்கட்ராமன், அந்த பெண்ணை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது.

இதை பார்த்த பொதுமக்கள் வெங்கட்ராமனை பிடித்து பல்லாவரம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து, வெங்கட்ராமனை கைது செய்து போலீசார் நடத்திய விசாரணையில், வேலை வாங்கி தருவதாக கூறி, ஒருவரிடம் இருந்து ரூ.7 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றிய வழக்கில் வெங்கட்ராமன் தொடர்புடையவர் என்று தெரியவந்தது.