சென்னை, ஜூலை 31: கரூரில் சுமார் ரூ.115 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக்கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
இந்த கல்லூரியில் 150 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 1350 மருத்துவ படிப்பு இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 115 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்து, முதலாம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வகுப்பினையும் தொடங்கி வைத்தார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு இந்திய மருத்துவக் குழும விதிகளின்படி, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்குத் தேவையான இயல்கூடம், நிர்வாகக் கட்டடம், மாணவ மற்றும் மாணவியர்கள் தங்கும் விடுதிகள், முதல்வர் குடியிருப்பு, மருத்துவ ஆசிரியர்கள் குடியிருப்பு, செவிலியர் விடுதி, உறைவிட மற்றும் உதவி உறைவிட மருத்துவ அலுவலர், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் குடியிருப்புகள் உள்ளிட்ட புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த மருத்துவக் கல்லூரிக்கு தேவையான மருத்துவ பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நியமனம் செய்யும் பொருட்டு, இந்திய மருத்துவக் குழும விதிகளின்படி 985 நிரந்தர பணியிடங்களும், புற ஆதார முறையில் நியமனம் செய்ய 57 பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் 150 மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் குழுமத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக, புதிதாக நிறுவப்பட்டுள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்கள் உட்பட, கூடுதலாக 1350 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.