வாஷிங்டன், ஆக. 1: சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப் பட்டிருக்கலாம் என்று அமெரிக்க அரசின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை மூலம் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து பின்லேடன் கொல்லப்பட்டதற்காக பழிக்குப்பழி வாங்குவேன் என அவனது மகன் ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தான்.

பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக செயல்பட்டுவந்த ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.

அவனைப்பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர்கள் பரிசாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்த நிலையில், ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அரசின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அவன் எப்போது, எங்கு கொல்லப்பட்டான் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை.