தாம்பரம், ஆக. 1: தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் துவக்க விழாவவில் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் அதிக மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீசாய் ராம் அறக்கட்டளை சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியின் 25 வது வருட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க நாளும், ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியின் 12 வது ஆண்டின் துவக்க நாள் விழாவினை சாய்ராம் கல்வி நிறுவனங்களின் சேர்மன் கலைச்செல்வி லியோ முத்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இவ்விழாவில் சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுதது, சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் மற்றும் ஊக்கமூட்டும் பேச்சாளர் பரமன் பச்சைமுத்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, மேலாண்மை துறை தலைவர் க.மாறன், கல்லூரி முதல்வர் பழனிக்குமார், முதலாமாண்டு துறைத்தலைவர் இராமகிருஷ்ணன் மற்றும் 1600 முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களும், 5000 பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.

சாய்பிரகாஷ் லியோமுத்து பேசுகையில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி அகில இந்திய அளவில் 123 வது இடத்தையும், ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்ப கல்லூரி 194 வது இடத்தையும் சிறந்த கல்வி நிறுவனமாக மத்திய அரசின் மனிதவளமேம்பாட்டு துறை சார்பாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பரமன் பச்சைமுத்து ஒவ்வொரு மாணவ மாணவியரும் திண்ணமான எண்ணமும், திறமையையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்வதன் மூலம் அரிய சாதனைகளையும், வெற்றியையும் வசப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் அண்ணா பல்கலை தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு 25 லட்சம் மதிப்பிலான லியோ முத்து கல்வி ஊக்கதொகை , சமூகத்தினரால் புறக்கணிக்கபட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 23 மாணவர்களுக்கு சுமார் 2.5 கோடி அளவிலான முழுபடிப்பிற்கான அனைத்து செலவுகளையும் சாய்ராம் அறக்கட்டளை சார்பாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.