சென்னை, ஆக. 1: தமிழகத்தில் போக்குவரத்தினை மேம்படுத்த 1050 பாலங்கள் கட்டுவதற்காக ரூ.147 கோடியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த தொகை தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்த பாலங்கள் அமைக்கவும், நீர்நிலைகளை பலப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சாலைகளை நெடுஞ்சாலை துறை மூலம் மேம்படுத்தும் பணி அரசு மேற்கொண்டு வருகிறது.

இதுமட்டுமின்றி உள்வட்ட சாலை, புறவழிசாலை, நான்கு வழிசாலை என பல்வேறு சாலைகள் வளர்ந்து வரும் மாவட்ட தலைநகரங்களிலும் நிலங்களை கையகப்படுத்தி, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுமட்டுமின்றி பல்வேறு சிறு பாலங்கள், தரைப்பாலங்கள் புதிதாக கட்டப்பட்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது நெடுஞ்சாலைதுறை மானிய கோரிக்கையின் போது அறிவித்திருந்தார். முதல்வர் அறிவித்த அந்த அறிவிப்பின் படி தற்போது 1050 பாலங்கள் கட்ட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஊரகப்பகுதிகளில் போக்குவரத்தினை மேம்படுத்திடவும், நீர்நிலைகளை கடந்திட ஏதுவாகவும் பாலங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் நடப்பாண்டில் 700 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள், 100 தரைப்பாலங்கள் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக தமிழகத்தில் கட்டப்பட உள்ளதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாலங்கள் கட்டுவதற்கான வேலையாட்களுக்கான ஊதியத்தினை மத்திய அரசு வழங்கும் எனவும், கட்டுமானப் பொருட்களுக்கு ஆகும் செலவில் 75 சதவிகிதம் மத்திய அரசும் 25 சதவிகிதம் தமிழக அரசும் நிதி ஒதுக்க இருக்கிறது.

மொத்தமாக 1050 பாலங்கள் கட்ட ஒதுக்கப்பட்டுள்ள 146 கோடியே 78 லட்சத்தில் 114 கோடியே 12 லட்ச ரூபாய் மத்திய அரசு வழங்கும் எனவும் 32 கோடியே 66 லட்சம் மாநில அரசும் வழங்கும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான நிதி உடனடியாக ஒதுக்கப்பட்ட பணிகளும் துவங்க என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாலப்பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலகெடு நிர்ணயிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.