புதுடெல்லி, ஆக. 1: கோவையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததுடன் அவளது தம்பியையும் கொடுரமாக கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மனோகரனுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு கோவையைச சேர்ந்த தனியார் பள்ளியில் படித்துவந்த முஸ்கான், ரித்திக் ஆகிய இரு குழந்தைகளை மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். முஸ்கான் மற்றும் ரித்திக் ஆகிய இருவரும் உடன்பிறந்தவர்கள். இதில் முஸ்கான் என்ற பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளனர். முஸ்கானின் தம்பி ரித்திக்கையும் சித்ரவதை செய்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.

இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றிய மோகன்ராஜ் மற்றும் மனோகரன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட போது, மோகன் ராஜ் தப்பி ஓடியதால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும், மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மனோகரன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, குற்றவாளி மனோகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.