நெல்லை, ஆக. 1: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள் திடீரென தலைமறைவாகி உள்ளார்.

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், வேலைக்காரப் பெண் மாரியம்மாள் ஆகியோர் உமா மகேஸ்வரியின் வீட்டில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தனது தாயார் சீனியம்மாளின் அரசியல் எதிர்காலத்தை உமா மகேஸ்வரி பறித்துவிட்டதற்கு பழிவாங்கும் வகையில் இந்தக் கொலையை செய்ததாக கார்த்திகேயன் போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

நெல்லை ரோஸ் நகரில் உமாமகேஸ்வரி வசித்து வந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று கார்த்திகேயனை கொலை செய்ததை நடித்துக் காட்டுமாறு போலீசார் உத்தரவிட்டனர். அதன்படி கொலைகளை செய்ததை தத்ரூபமாக அவர் நடித்துக் காட்டினார்.

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை பெறும் பணி நிறைவு செய்யப்பட்டு இன்று, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவுள்ளது.

நாளை அல்லது திங்களன்று கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய சிபிசிஐடி திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் கார்த்திகேயனின் தாயாரும், தி.மு.க. பிரமுகருமான சீனியம்மாள் தலைமறைவாகி விட்டார். எனவே, சீனியம்மாளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.