புதுவை, ஆக.1: புதுவையில் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று அரசும் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டது.

இது குறித்து அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுவை யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க உத்தேசித்து பொதுமக்களின் கருத்துகளை பெற்றதுடன், பிளாஸ்டிக் வர்த்தகர் சங்கம், ஜவுளி சங்கம் மற்றும் உணவு விடுதி சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, பத்து வகையான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை புதுவை யூனியன் பிரதேசத்தில் தயாரித்தல் எடுத்துச் செல்வது விற்பனை செய்வது சேகரித்து வைத்தல் மற்றும் பயன்பாட்டிற்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் தடை விதிக்கப்படும். இந்த தடையை மீறுபவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியின்படி தண்டிக்கப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.