மும்பை, ஆக.1:  இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலம் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இருப்பினும், இவர்களின் பதவிக்காலம் வெஸ்ட் இண்டீஸ் தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு காலஅவகாசமும் முடிந்துள்ளது.

இந்த நிலையில், இந்தப் பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்க, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கபில்தேவ், அன்ஷுமன் கெயிவாட், சாந்தா ரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், வரும் 13 (அ) 14-ம் தேதிகளில் நேர்காணல் நடத்தவுள்ளனர். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு டாம் மூடி, ரவிசாஸ்திரி ஆகியோர் விண்ணப்பித்துள்ளார். பந்துவீச்சு பயிற்சியாளர் பதவிக்கு, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேச பிரசாத் விண்ணப்பித்துள்ளார். இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஏற்கனவே பதவி வகித்திருக்கும் இவர், கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.