ஓய்வுகாலத்தில் புத்தகம் எழுதுவேன்: டிஜிபி ஜாங்கிட்

சென்னை

சென்னை, ஆக.1: தமிழகத்தின் டிஜிபியாக இருந்துவந்த ஜாங்கிட்டின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், எனது 34 ஆண்டுகால பணிக்காலத்தில், 33 ஆண்டுகள் தமிழகத்திலேயே பணியாற்றியதை எண்ணி பெருமையடைகிறேன்.

எனது பதவிக்காலத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குற்ற செயல்களை தடுத்து, சட்டம், ஒழுங்குகளை நிலைநாட்டியுள்ளேன். குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடியில் நிலவிவந்த ஜாதி கலவரங்களை ஒடுக்கியுள்ளேன். கும்மிடிபூண்டி எம்.எல்.ஏவாக இருந்த சுதர்சனம் கொலை வழக்கில் தொடர்புடைய பவாரியா கொள்ளையர்களை கண்டறிந்து அவர்களை அடியோடு ஒடுக்கியதுதான் பெரும் சவாலாக இருந்தது.

தற்போது, தமிழகத்தில் பவாரியா கும்பலே இல்லாத அளவிற்கு ஒழித்துள்ளோம். புறநகர் கமிஷனராக, சென்னை கூடுதல் கமிஷனராக இருந்தபோதும் ரவுடி தனத்தை ஒழித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியுள்ளேன்.

அரசு ஆணையிட்ட அனைத்து பணிகளையும் நான் திருப்திகரமாக செய்து முடித்துள்ளேன். ஏற்கனவே நிறைய புத்தகங்களை எழுதியுள்ளேன். எனது ஓய்வு காலத்திலும் புத்தகங்களை எழுதுவேன். மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.