வேலூர், ஆக.2: வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, திமுக பொருளாளர் துரைமுருகனின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான இடத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டதை அடுத்து அந்தத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் 5-ந் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி தற்போது உச்சக்கட்ட பிரச்சாரத்தில் கட்சிகளும், வேட்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் அதிமுகவின் கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் தலைவரான ஏசி.சண்முகம், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் தவிர நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. தினகரனின் அமமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் இந்த தொகுதியில் பிரச்சாரம் அனல் பறக்கும் வகையில் நடந்து வருகிறது. ஏற்கனவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் வேலூர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

தற்போது 2-ம் கட்டமாக இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். இன்று மாலை 5 மணிக்கு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மாலை 6 மணிக்கு வேலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.

ஏசி.சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார். அதிமுகவின் தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முதல் கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார்.

தற்போது 2-ம் கட்ட பிரச்சாரத்தை அவர் நேற்று தொடங்கினார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். இன்று குடியாத்தம், அணைகட்டு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

வேலூரில் நாளை மாலை நடைபெறும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் முத்தரசன், காதர் மொய்தீன், திருமாவளவன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வரும் 5-ம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் 9-ம் தேதி எண்ணப்படும்.