சென்னை, ஆக. 2: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடந்த மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகலில் விசாரிப்பதாக நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஆம்பூரில் பங்ஷன் பேலஸ் என்ற மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மு.க. ஸ்டாலின் அந்த மண்டபத்திற்குள் சென்றார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மண்டபத்திற்கு ஆம்பூர் வட்டாட்சியாளர் சீல் வைத்தார். இதனால் மண்டபத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வக்கீல் நீலகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி. ஆதிகேசவலு முன்பு இன்று காலை ஆஜராகி, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மண்டபத்தை சீல் வைத்துள்ளனர். இதனால் வரும் ஞாயிற்றுக் கிழமை மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை உடனே அகற்ற உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு தாக்கல் செய்தால் பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தார்.