காஷ்மீருக்கு கூடுதல் படைகளா? மத்திய அரசு விளக்கம்

இந்தியா

ஸ்ரீநகர், ஆக.2: காஷ்மீரில் பாதுகாப்பு பணிக்காக கூடுதலாக 28 ஆயிரம் துணை ராணுவப்படையினர் அனுப்பப்பட்டு உள்ளதாக வெளியான தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்புக்காக 28 ஆயிரம் துணை ராணுவப்படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தியது. காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் 370, 35ஏ பிரிவுகளை நீக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் முன்னேற்பாடாக கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளது எனவும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில் இதனை மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

கடந்த மாதம் 26-ம் தேதி வெளியிட்ட உத்தரவுப்படி 10 ஆயிரம் பேர் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு சென்றடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கூடுதலாக படைகள் அனுப்பப்படுவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று அது மறுத்துள்ளது.