பாங்காக், ஆக.2: இந்தியாவும், பாகிஸ்தானும் கேட்டுக்கொண்டால் காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயாரென மீண்டும் கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கருத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும், மூன்றாவது நாட்டின் தலையீட்டுக்கு இடமில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ஆசியான் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பல்வேறு நாட்டு அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், பாங்காக்கில் தன்னைச் சந்தித்த மைக் பாம்பியோவிடம், இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சனைக்கு சிம்லா ஒப்பந்தம், லாகூர் பிரகடனம் ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாடுகளும் சேர்ந்து தீர்வு காணும் என்றும், மூன்றாவது நாட்டின் தலையீடு எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.