புதுவை, ஆக.2:புதுச்சேரியில் துறைமுகம் மேம்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. புதுவை மாநிலம் தேங்காய்த்திட்டு பகுதியில் உள்ள துறைமுகத்தை மத்திய அரசு சாகர்மாலா திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்தது. இதுகுறித்த கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடந்தது. இதில், கலெக்டர் அருண், துறைமுக அதிகாரி ஜெகஜோதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள 18 மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ கூறுகையில், துறைமுகத்தை மேம்படுத்தி விரிவுப்படுத்தும் திட்டத்தால் மீனவர்களுக்கு பாதிப்புகள் உள்ளது. அதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து பேசிய ஒரு தரப்பு மீனவர்கள், இத்திட்டம் கொண்டுவரும் பட்சத்தில், மீனவர்களுடைய பாதுகாப்பை அரசு உறுதி செய்திட வேண்டும் என்று கூறி இத்திட்டத்திற்கு வரவேற்பு தரும் விதத்தில் கருத்துகளை தெரிவித்துவந்தனர்.
பின்னர் பேசிய மற்றொரு தரப்பு மீனவர்கள் துறைமுக விரிவாக்க திட்டம் கொண்டுவந்தால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கருத்துகளை முன்வைத்தனர்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் மீனவர்களிடையே இருமனநிலை நிலவிவந்நதால், கூட்டத்தில் தொடர்ந்து சலசலப்பு ஏற்பட்டு கொண்டே இருந்தது. இதனையடுத்து, இருதரப்பு மீனவர்களும் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், கூட்டத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.