ஸ்ரீநகர், ஆக.3:  பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்துறையின் முன்னெச்சரிக்கையை அடுத்து அமர்நாத் யாத்திரையை நிறுத்த உத்தரவிட்டதுடன், யாத்ரீகர்களையும் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் காஷ்மீரில் பலமான தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் பலர் ஊடுருவியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் வழியில், ஷேஷ்நாக் அருகே மனித இலக்குகளைத் தாக்கும் வகையிலான கிளேமோர் வகை கண்ணிவெடிகள் சிக்கியது என்றும், இவை பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில் முதன் முறையாக இவ்வகை கண்ணிவெடிகள் சிக்கியுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து அமர்நாத் யாத்ரீகர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக உடனடியாக காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியேறுமாறு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது.

கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 15-ம் தேதி ஷ்ரவன் பூர்ணிமாவுடன் நிறைவடைவது வழக்கம். எனினும் இம்முறை இரு வாரங்களுக்கு முன்னதாக நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.