இழுவை கப்பலில் பதுங்கி வந்த மாஜி துணை அதிபர் அகமது அதீப் கவுர் மாலத்தீவிடம் ஒப்படைப்பு

TOP-1 இந்தியா முக்கிய செய்தி

புதுடெல்லி, ஆக.3: சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் கவுர் இன்று காலை நாடு கடத்தப்பட்டு சர்வதேச கடல் எல்லையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவருடன் கப்பலில் இருந்த 9 ஊழியர்களும் ஒப்படைக்கப்பட்டனர்.

கடந்த வியாழன் அன்று மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த இழுவை கப்பல் ஒன்றில் அகமது அதீப், கப்பல் ஊழியர்களுடன் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் ரகசிய அறை ஒன்றில் பதுங்கி இருந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்த இழுவைக் கப்பலக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த தகவல் கிடைத்ததும் டெல்லியில் இருந்து உளவுத்துறை அதிகாரிகள் தூத்துக்குடிக்கு விரைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது விசா உள்ளிட்ட ஆவணங்கள் இன்றி அவர் தூத்துக்குடி வந்தது தெரியவந்தது. மேலும் வெளிநாட்டினருக்குரிய பாதைகளில் வராமல் அவர் தனியாக வந்திருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட்டது.

மாலத்தீவில் ஊழல் உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளை அவர் எதிர்கொண்டு இருப்பதால் விசாரணைக்கு பயந்து வந்ததாக கூறப்பட்டது. மேலும் அங்கு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் அடைக்கலம் தேடி வந்ததாகவும் அதீப் கூறினார். 37 வயதான அதீப் 2015-ல் அந்நாட்டின் இளம் துணை அதிபராக இருந்தார்.

அப்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமின் விரைவுப் படகில் சென்று கொண்டிருந்த போது அந்த படகு மீது தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானார். அவருக்கு கடந்த 2016-ல் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அண்மையில் சிறைத்தண்டனை ரத்து செய்யப்பட்டது. பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தற்போது ஊழல் வழக்குகள் மீது அவரிடம் தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்திய பிறகு இந்தியாவுக்கும், மாலத்தீவுக்கும் உள்ள நல்லுறவை கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக வந்த அதீப்பை திருப்பி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது.

மாலத்தீவின் பாதுகாப்புக்கு இந்தியா உத்தரவாதம் அளித்து இருக்கிறது என அந்நாட்டின் அதிபர் அப்துல்லா சமால் கூறியிருந்தார். இதனைக் கருத்தில் கொண்டு அவர் மாலத்தீவுக்கே நாடு கடத்த மத்திய அரசு முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படை பாதுகாப்புடன் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது அதீப் கவுர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

அவருடன் ஒரு இந்தியர், 8 இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று அதிகாலை சர்வ தேச கடல் எல்லையில் மாலத்தீவு பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனிடையே மாலத்தீவு அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அதீப் தப்புவதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தப்பிச் சென்றது கடும் தண்டனைக்குரிய குற்றம் என்பதால் மாலத்தீவு பாதுகாப்புப் படையினர் தீவிரமாக விசாரிப்பார்கள் என்று தெரிகிறது.