செங்குன்றம், ஆக.3: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தீவிரவாதி பக்ரூதினின் சிறைக்கு பின்னால் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த செல்போன், சார்ஜர்கள், சிம்கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

புழல் மத்திய சிறையில் உள்ள விசாரணை பிரிவு சிறையில் நேற்றிரவு சிறைத்துறை ஜெயிலர் உதயகுமார் சோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது, தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் அடைக்கப்பட்டுள்ள சிறைக்குபின்னர், மாமரத்தின் கீழே காலி ஊறுகாய் பாட்டில் ஒன்று கவிழ்த்து வைக்கப்பட்டிருந்துள்ளது.

சந்தேகத்தின் பேரில், அந்த பாட்டிலை எடுத்துவிட்டு, அந்த இடத்தை தோண்டிபார்த்தபோது, செல்போன், சிம்கார்டு, இரண்டு சார்ஜர்கள் இருந்தது தெரியவந்ததையடுத்து, அவற்றை ஜெயிலர் கைப்பற்றி போலீசிடம் ஒப்படைத்துள்ளர்.

இது குறித்து, ஜெயிலர் உதயகுமார் அளித்த புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிந்து, செல்போனை சிறைக்குள் கொண்டுவந்தது யார்? அதனை யாருக்காக மண்ணில் வைத்து புதைக்க வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

தீவிரவாதி பக்ரூதின் அடைக்கப்பட்டிருந்த சிறைக்கு பின்னால் இருந்து மீட்கப்பட்டதால், இதில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.