ராஜப்பூர், ஆக.3:  ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷாவுக்கு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது, கடுமையான தண்டனை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

சைஷயது முஷ்டாக் தொடரில் விளையாடுவதற்காக, பிப்ரவரி மாதம் பிருத்வி ஷாவுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தை பிருத்வி ஷா உட்கொண்டது உறுதியானதை அடுத்து, அவருக்கு 8 மாத காலம் (மார்ச் 16 முதல் நவம்பர் 15 வரை) இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை, கடுமையானது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வெங்சர்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பிருத்விஷாவின் எளிமையான குடும்ப பின்னணி மற்றும் வயதை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை அளித்திருக்க வேண்டும். சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வரும் வீரர்களிடம் தடை செய்யப்பட்ட மருந்துகள் பற்றிய விவரங்களை, மாநில அளவிலான கிரிக்கெட் அமைப்போ, தேசிய கிரிக்கெட் அகாடமியோ அல்லது பயிற்சியாளர்களோ தெரிவித்திருக்க வேண்டும். இருமல் மருந்தில் என்ன இருக்கும் என்பது சாதாரண குடும்ப பிண்ணனியில் இருந்து வரும் வீரர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு 8 மாத தடை என்பது அதிகப்பட்சம்தான். 3, 4 மாதங்களாக குறைத்திருக்கலாம் என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.