சென்னை, ஆக.3: சென்னையிலிருந்து ஹாங்காங் நோக்கி புறப்பட்ட விமானத்தில் நடுவானில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து, மீண்டும் அவசர அவசரமாக சென்னை விமான நிலையத்திற்கே வந்து தரையிறக்கப்பட்டது.

சென்னையிலிருந்து ஹாங்காங்கிற்கு இன்று காலை 5.30 மணியளவில் கதே பசிபிக் என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. 20 நிமிட பயணத்திற்கு பிறகு, நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோது அதில், பயணித்த சஹானா (7 வயது ) என்ற குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், விமானிக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய விமானி, நடந்ததை கூறி விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டுள்ளார்.

இதனையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர், மீண்டும் சென்னை விமான நிலையம் நோக்கி திரும்பிய விமானம், ஓடுதளம் 35-ல் தரையிறக்கப்பட்டது.
உடனடியாக, ஏர்போர்ட்டில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது. இதனையடுத்து, குழந்தையின் பெற்றோர் பயணத்தை ரத்து செய்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, சில மணிநேர தாமதத்திற்கு பிறகு, 6.15 மணியளவில் விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.