சென்னை, ஆக.3: டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு நடிகர் அஜித்குமார் தகுதி பெற்றுள்ளார்.

மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் கடந்த 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏர்ரைபிள், ஏர்பிஸ்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டியில் 10 எம்ஏர்பிஸ்டல் பிரிவில் சென்னை ரைபில் கிளப் சார்பில் நடிகர் அஜித் கலந்து கொண்டார். மேலும் மாநில அளவில் சிறந்து விளங்கும் வீரர்களும் இதில் கலந்து கொண்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் நடிகர் அஜித் இலக்கை நோக்கி நேர்த்தியாக துப்பாக்கியால் சுட்டார். இதனையடுத்து அவர் இரண்டாவது
சுற்றுக்கு முன்னேறினார்.

போட்டியின் இறுதி நாளான நேற்று 2-வது சுற்று போட்டிகள் நடைபெற்றது. இரண்டாவது சுற்றிலும் தன்னுடைய நேர்த்தியான துப்பாக்கி சுடும் திறனை வெளிப்படுத்தி சரியான இலக்கை நோக்கி சுட்டு அதிக புள்ளிகளுடன் அதிலும் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிக்கு நடிகர் அஜித்குமார் தகுதி பெற்றுள்ளார்
மாநில அளவிலான போட்டியில் வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அஜித் குமாருக்கு ரைபில் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த தகவலை அறிந்த அஜித் குமார் ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வெற்றி வாசகங்களையும், வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.